டெல்லியில் மேலும் 400 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! ஆளுநருடன் பச்சைக்கொடி காட்டிய முதல்வர் கெஜ்ரிவால்!
டெல்லி மிக விரைவில் சிறந்த மின்சார பேருந்து சேவைக்காக உலகம் முழுவதும் பிரபலமாகும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இணைந்து இன்று 400 எலக்ட்ரிக் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதன் மூலம் தலைநகர் டெல்லியில் இயக்கப்படும் எலக்ட்ரிக் பேருந்துகளின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஐபி டிப்போவில் நடந்தது. "டெல்லியில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது 800 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக டெல்லிவாசிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்குப் பின் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பேருந்துகளுக்கான பட்ஜெட் குறித்து விளக்கியுள்ளார்.
இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என மாறுகிறதா? நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா?
"மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்களுடன் இணைந்து இன்று 400 புதிய மின்சார பேருந்துகளை டெல்லி மக்களுக்கு அர்ப்பணித்தேன்" என்று குறிப்பிட்டுள்ள அவர், மானியத் திட்டத்தின் கீழ் 921 பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டதை குறிப்பிட்ட, அவர் அதன் ஒரு பகுதியாக மேலும் 400 பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய அரசால் ரூ.417 கோடி மானியம் வழங்கப்பட்டது என்றும், டெல்லி அரசு ரூ.3,674 கோடியை செலவிடும் என்றும் கெஜ்ரிவால் தனது இந்தி பதிவில் கூறியுள்ளார். "டெல்லியில் தற்போது மொத்தம் 800 மின்சார பேருந்துகள் உள்ளன. இது நாட்டிலேயே மிக அதிகம்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"2025ஆம் ஆண்டு இறுதிக்குள் டெல்லியில் மொத்தம் 8,000 மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் இலக்கு. அந்த நேரத்தில் டெல்லியில் 10,000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கும், அதில் 80 சதவீதம் மின்சாரத்தில் இயங்குபவையாக இருக்கும்" எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
"மிக விரைவில் டெல்லி அதன் சிறந்த மின்சார பேருந்துகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும்" என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.