டெல்லி தீ விபத்தில் உயிரிழந்த 43 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியின் ராணி ஜான்சி சாலை அனாஜ் மார்க்கெட் பகுதியில் சூட்கேஸ்கள், டிராவல் பேக்குகள் மற்றும் அதன் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி, குறுகியதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் எப்போதும் காணப்படும். இந்த தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சிறிது நேரத்தில் மளமளவென அனைத்து இடங்களில் வேகமாக பரவியது. 

இந்த விபத்தில் 43 பேர் உடல் கருகி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் என்பதும், அவர்கள் பணி முடிந்து தூங்கி கொண்டிருந்ததும், தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், டெல்லி  தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் பார்வையிட்டார். விபத்து எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் டெல்லியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், பாஜக தரப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.