இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த, மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், கொரோனா தடுப்பு பணிகளையும் சிகிச்சை பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அதிகபட்சமாக மகாரஷ்டிராவில் 3600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் தான் பாதிப்பு அதிகமாகவுள்ளது. டெல்லியில் 1893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதுடன், தரமான சிகிச்சையின் விளைவாக அதிகமானோர் குணமடைந்துகொண்டிருக்கின்றனர். கடந்த நேற்று முன் தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் மட்டும் 285 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு போதவில்லையென்பதால், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஊரடங்கை போல அல்லாமல், இம்முறை சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்தமுறை சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர், தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள், ஊருக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலைகள் ஆகியவை சரியான முன்னெச்சரிக்கையுடன் சமூக விலகலை கடைபிடித்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கும் தடையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 

எனவே ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு, எந்த மாதிரியான தளர்வுகளை செய்வது என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் ஆலோசித்துவருகின்றன. இந்நிலையில், இப்போதைக்கு டெல்லியில் எந்தவிதமான தளர்வுகளும் செய்யப்படமாட்டாது என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் 72 பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஊரடங்கை தளர்த்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே இப்போதைக்கு ஊரடங்கில் எந்தவித தளர்வும் செய்யப்படாது. ஊரடங்கை தளர்த்துவது குறித்து வரும் 27ம் தேதி மீண்டும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.