சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவன பணிப்பெண்களை நிர்வாணமாக்கி சோதனை நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியதால் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் புகார் கூறும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவிய வீடியோவால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 28 மற்றும் 29-ந்தேதிகளில் சென்னையில் இருந்து டெல்லி சென்று, அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவன விமானங்களில் இருந்த பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை அந்த நிறுவன பாதுகாவலர்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், “நாங்கள் விமானத்தில் இருந்து பணி முடிந்ததும் கழிவறைக்கு செல்ல அனுமதி இல்லை. நேரடியாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். அங்கு எங்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி கூனி குறுகி நிற்க செய்கின்றனர். சோதனை என்ற பெயரில் தொடக்கூடாத இடங்களில் தொடுகிறார்கள். 10 ஆண்டுகளாக பணிபுரியும் பெண்களையும் கூட நம்பாமல், அவர்கள் அணியும் நாப்கின்களையும் கழற்றி சோதனை நடத்தினார்கள்” என்றும் மற்றொரு பெண் “என்னைத் தகாத இடத்தில் தொட்டு ஒருவர் சோதனை செய்தார். நான் வெற்று உடலில் இருந்தேன். எனக்கு அவமானமாக இருந்தது” கூறியுள்ளார்.

இதற்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன அதிகாரிகள், தற்போது விளக்கம் அளித்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் தனியார் விமானங்களில், பயணிகளுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் இதுபோல் விமான நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் உணவு பொருட்களோடு, அந்த விமானத்தில் வேலை செய்யும் பணிப்பெண்கள் வெளியில் இருந்து தாங்கள் வாங்கி வரும் பொருட்களை பயணிகளுக்கு விற்பதாகவும், சில நிறுவனங்களுக்கு ஆதரவாக பொருட்களை கடத்த உதவுவதாகவும் புகார்கள் வந்தது.

இதனையடுத்து பயணிகள் எவ்வாறு விமான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்களோ?, அதேபோல்தான் பணிப்பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தினோம். இது இயல்பான சோதனைதான். சர்வதேச விமான ஆணைய விதி முறைகளுக்கு உட்பட்டுதான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் விதி முறைகள் மீறப்படவில்லை. சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுகிறது. ஒரு அறையில் தாழிடப்பட்ட நிலையில் நன்கு பயிற்சி பெற்றவரால்தான் சோதனை நடத்தப்பட்டது. பெண்களைப் பெண்களும் ஆண்களை ஆண்களும்தான் சோதனை செய்தார்கள். இதில் ஒருசில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, பெண்களின் ஆடைகளைக் களைந்து சோதனையிடவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், உரிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.