பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பசு பாதுகாப்பு பெயரில் நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்  ஆஜரான வழக்கறிஞர், பசு பாதுகாப்பு  என்ற பெயரில் வன்முறையை மட்டும் ஆதரிக்க மாட்டோம் என மத்திய அரசு கூறிய போதும், இந்தியா முழுதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் சட்டம் ஒழுங்கு எனக்கூறி பிரச்னையை மத்திய அரசு கைகழுவ முடியாது என்றும் பசு பாதுகாப்பு பெயரில் நடக்கும் கலவரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட சட்டத்தில் விதிஉண்டு எனவும்  வாதாடினர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  பசு பாதுகாப்பு குழுக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் , பசு பாதுகாப்பு குழுக்களிடமிருந்து எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு போலீஸ் டிஜிபிக்களுடன் அனைத்து மாநில தலைமை செயலரும் ஆலோசனை நடத்தி  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.