இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்  இதுவரை இல்லாத அளவில் 32,695 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில்,  இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,68,876ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 606 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 32,695 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6,12,815 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,31,146 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில்  மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 2,75,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,52613 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10,928 பேர் உயிரிழந்துள்ளனர். 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,51820 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2167 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,16,993 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.