காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பாட்டலும் தாக்கம் சற்றும் குறையவில்லை. தற்போது, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 543 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 2547 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா 4203 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அங்கு 223 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2003 பேருக்கு நோய்த்தொற்று உறுதி  செய்யப்பட்ட நிலையில் 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றின் அறிகுறிகள் முதலில் தொண்டை வலி, சளி, இருமல், காய்ச்சல் என்று கூறப்பட்ட வந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

அதில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அதேபோன்று, டெல்லியில் 186 பேருக்கு அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று இருந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.