டெல்லியில்  உள்ள சிஆர்பிஎப் பட்டாலியனில், கடந்த இரண்டு வாரங்களில் 122 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல், தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை டெல்லியில் மொத்தம் 3,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  61 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில், டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள மயூர் விஹார் சிஆர்பிஎப் பட்டாலின் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட வீரர் ஒருவருக்கு கடந்த  ஏப்ரல் 21ம் தேதியன்று கொரோனா உறுதியானது. அவர் டெல்லியில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூலம் பலருக்கும் கொரோனா பரவியது. ஏற்கனவே 54 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே  68 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. 

இன்னும் 100 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. கொரோனா பாதித்தவர்கள். மண்டவாலியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த அசாமை சேர்ந்த 55 வயது வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி டெல்லியின் சபதர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை  கவலை அடைய செய்துள்ளது.