உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை ஒழிக்க உலக நாடுகள் பலவும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து ‘கோவேக்ஸின்’ என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. அடுத்தடுத்து சோதனை கட்டங்களைத் தாண்டிய அந்த மருந்து, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கோவேக்ஸின் ஹரியானா, டெல்லி ஆகிய மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு செலுத்தும் பணிகள் தொடங்கின. ஹரியானாவில் 3 பேருக்கு கோவேக்ஸின் மருந்து செலுத்தப்பட்டது. இதற்கு அவர்கள் மூவரும் முழுமையாக ஒத்துழைத்த்துள்ளனர். ஊசி செலுத்திய பிறகு மூவருக்கும் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஹரியானா சுகாதார துறை தெரிவித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்களுக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹரியானா, டெல்லியைத் தொடர்ந்து பீஹார், ஒடிஷா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் பரிசோதனையை நடத்த மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கோவேக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை  செய்ய சென்னையை அடுத்த காட்டங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் 50 முதல் 100 பேருக்கு இங்கே ஊசி செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள்  எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் தொடங்கியுள்ளன.


ஊசி மருந்து செலுத்திய பிறகு, அந்த மருந்து மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை மருத்துவர்களும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கண்காணிப்பார்கள். அதன் அடிப்படையில் மருந்தின் தன்மையும் அது பயன்பாட்டுக்கு வருவதும் தெரிய வரும்.