உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை ஒழிக்க உலக நாடுகள் பலவும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து ‘கோவேக்ஸின்’ என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. அடுத்தடுத்து சோதனை கட்டங்களைத் தாண்டிய அந்த மருந்து, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கோவேக்ஸின் மருந்து மனிதர்களுக்கு செலுத்தும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கின. ஹரியானாவில் ரோடாக் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மருத்துவமனையில் 3 பேருக்கு கோவேக்ஸின் மருந்து செலுத்தப்பட்டது. இதற்கு அவர்கள் மூவரும் முழுமையாக ஒத்துழைத்த்துள்ளனர். ஊசி செலுத்திய பிறகு மூவருக்கும் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஹரியானா சுகாதார துறை தெரிவித்தது.


இந்த மருந்து மூவரின் உடலிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை மருத்துவர்களும் மருந்து ஆராய்ச்சியாளர்களும் கண்காணித்துவருகிறார்கள். இந்நிலையில் அடுத்த கட்டமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை (ஜூலை 20) மனிதர்களுக்கு மீண்டும் கோவேக்ஸின் மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர் சஞ்ஜெய் ராய் கூறுகையில், “தடுப்பூசி செலுத்துவதற்காக 18 - 55 வயது நிரம்பிய தன்னார்வளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பரிசோதனை மேற்கொள்ளவர்களுக்கு எந்த நோயும் இல்லாமல் பூரண உடல்நடத்துடன் இருக்க என்பது விதி. அதற்கான பணிகள் நாளை முதல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.