ராணுவத்தின் தரைப்படை தளபதி நியமிக்கப்பட்ட விசயத்தில் மத்திய அரசு பாரம்பரிய சீனியாரிட்டி விதிமுறையை பின்பற்றவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஓய்வு

ராணுவத்தின் தரைப்படைத் தளபதியாக தற்போது இருக்கும் ஜெனரல் தல்பிர்சிங், விமானப்படைத் தளபதியாக இருக்கும், ஜெனரல் அரூப்ராஹா பதவிக்காலம் வரும் 31-ந் தேதியோடு முடிகிறது.

நியமனம்

இந்நிலையில், 11-வது கோர்கா ரைபிள்ஸ் பிரிவின் 5-வது பட்டாலியனையைச் சேர்ந்த லெப்டினென்ட் பிபின் ராவத்தை புதிய தரைப்படைத் தளபதியாக நேற்று முன் தினம் மத்திய அரசு நியமித்தது. அதேபோல விமானப்படைத் தளபதியாக ஏர் மார்ஷல் பி.எஸ். தனோவாநியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டு

இந்நிலையில், புதிய தரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதில் சீனியாரிட்டி விதிமுறை பின்பற்றப்படவில்லை என காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தற்போது தரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத்துக்கு சீனியர்களாக லெப்டினென்ட் ஜெனரல் பிரவின் பக்‌ஷி, லெப்டினென்ட் ஜெனரல் பி.எம். ஹரிஸ் ஆகியோர் இருக்கும்போது 3-ம் நிலையில் இருக்கும், ராவத் எப்படி தரைப்படைத் தளபதியாக நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

காங்கிரஸ்

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ராணுவத்தில் தரைப்படைத் தளபதியை நியமிக்கும் விசயத்தில், ஏன் மத்தியஅரசு சீனியாரிட்டி விதிமுறையை பின்பற்ற மறுக்கிறது?. தற்போது துணை நிலையில் இருக்கும் அதிகாரியை நியமிக்காமல், ராவத் நியமிக்கப்பட்டது ஏன்?

ராணுவ தலைமை நியமனத்தில் ஏன் சீனியாரிட்டி விதிமுறையை ஏன் மத்திய அரசு மீறி இருக்கிறது. மூத்த அதிகாரிகள் லெப்டினென்ட்பிரவின் பக்்ஷி, லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி ஹரிஸ் ஆகியோரை புறந்துள்ளி, ராவத்தை ஏன் பிரதமர் மோடி நியமித்துள்ளார்.

இதில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தளபதி ராவத் சீனியாரிட்டி அடிப்படையில் மூன்றாவது இடத்தில் கூட இல்லை, 4-வதாக இருக்கிறார். 3-வது இடத்தில் லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ். நெகி இருக்கிறார்'' எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பொதுவாக ராணுவ தலைமை பொறுப்பு நியமன உள்விஷயத்தில் அரசியல் கட்சிகள் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்காமல் ஒதுங்கியே இருக்கும். ஆனால், ரூபாய் நோட்டு விவகாரத்தில் தொடர்ந்து பிரதமர் மோடியை எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தலும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் எம்.பி.யுமான எம்.டி. சலிம் கூறுகையில், “ பொதுவாக ராணுவப்படை அதிகாரிகள் விஷயத்தில் நாங்கள் கருத்து ஏதும் தெரிவிப்பதில்லை. ஆனால், நாட்டின் மிகப்பெரிய அமைப்புகளில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் சீனியாரிட்டி விதிமுறையை மீறி தற்போதைய நியமனத்தை மத்திய அரசு செய்துள்ளது'' என்றார்.

திடீர் அறிவிப்பு

அது மட்டுமல்லாமல், தரைப்படை, விமானப்படைத் தளபதிகள் ஓய்வு பெறுவதற்கு 2 அல்லது 3 மாதம் முன்பே அடுத்த தளபதிகள் அறிவிக்கப்படுவார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது தான் முதல்முறையாக தளபதிகள் ஓய்வு பெற இருக்கும் 2 வாரத்துக்கு முன் தளபதி நியமனம் நடந்துள்ளது.

இதுபோல் விதிமுறைகளை மீறி கடந்த 1983ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே தரைப்படைத்தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். அப்போதுசீனியராக இருந்த ஜெனரல் ஏ.எஸ். வைத்யாவை நியமிக்காமல், ஜெனரல் கே.எஸ். சின்ஹா நியமிக்கப்பட்டார்.

இதில் தற்போது சீனியர்களான ஜெனரல் பிரவீன் பக்சி, கொல்கத்தா கிழக்குப்படையின் கவசப்பிரிவு தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார். ஜெனரல் பி.எம். ஹரிஸ் புனே நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காலாட்படையின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.