கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க எந்த விதத்திலும் சீனாவுக்கு இந்தியா உதவ தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைகட்டுப்படுத்த முடியாமல் சீனா தவித்து வருகிறார்கள். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனோ வைரசுக்கு இதுவரை 811 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 89 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.

2,656 பேருக்கு புதிதாக இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 37,198 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீனாவின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பரவி தொடங்கி உள்ளதால் பீதி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த உதவிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.