இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை வரை இல்லாத வகையில் உச்சபட்சமாக  40,425 பேருக்க கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,18,043 ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில்,  இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,18,043ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 681 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 27,497 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7,00,087 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,90,459ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும், 2,56,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,40,47,908 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 3,10,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,569ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,854ஆக உயர்ந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,70,693 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2481 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,21,582 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,597 பேர் உயிரிழந்துள்ளனர். 4வது இடத்தில் கர்நாடகாவும், 5வது இடத்தில் குஜராத்தும் உள்ளது.