குஜராத் மாநிலத்தில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸால் கடந்த மூன்று நாட்களில் 700-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் மிரட்டிவருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.65 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் 17,600 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 559 பேர் உயிரிழந்துள்ளனர். 2,854 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
 நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அந்த மாநிலத்தில்  3651 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 1,853 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மூன்றாவது இடத்துக்கு குஜராத் வந்துள்ளது. இந்த மா நிலத்தில் 1604 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா மத்திய பிரதேசம், தமிழ் நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 
இதில் குஜராத் மாநிலத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்புவரை 900-க்கும் கீழே இருந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது 1600-ஐ கடந்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் குஜராத்தில் புதிதாக 700-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 367 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக நோய்  தொற்றில் குஜராத் வேகமாக முன்றாம் இடத்துக்கு வந்துவிட்டது.