கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 436 பேர் தீவிரக் கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு சீனாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குத் திரும்பியவர்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சீனாவில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் 5 மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

கேரள மாநிலத்துக்குச் சென்று திரும்பிய மத்திய சுகாதாரக்குழுவவின் மருத்துவ அதிகாரி சவுகத் அலி நிருபர்களிடம் இன்று கூறுகையில், "கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 436 பேர் 5 மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தீவிரமான மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அங்கு செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டவை அனைத்திலும் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் மருத்துவக் கண்காணிப்பு சில நாட்களுக்குத் தொடரும். கரோனா வைரஸைக் கையாள்வதற்கு அனைத்து முன்னெச்சரிக்கையுடன் கேரளா தயாராக இருக்கிறது.

கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் தீவிரமான பரிசோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1-ம் தேதிக்குப் பின் சீனாவில் இருந்து வந்த கேரள மக்கள் அனைவரும் மருத்துவர்களிடம் முறையாகப் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே சீனாவின் வுஹான் நகரில் இருக்கும் கேரள மாணவர் ஒருவர் தொலைபேசி வாயிலாகக் கூறுகையில், " வுஹான் நகரில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியவில்லை. போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எங்கும் வெளியே செல்ல முடியாத சூழல் இருக்கிறது. அதனால் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கிறோம். இந்திய அரசு விரைவில் எங்களை மீட்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.