கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான 7 நாள் வீட்டு தனிமையை பிப்.,14 முதல் ரத்து செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான 7 நாள் வீட்டு தனிமையை பிப்.,14 முதல் ரத்து செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இந்தியாவில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. ரிஸ்க் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டு இந்தியா வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளும் ஆன்லைனில் ‛ஏர்சுவிதா' இணையதளத்தில் பதிவு செய்வதோடு, 14 நாளுக்கான பயண விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் 72 மணிநேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்று, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான தடுப்பூசியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் 7 நாள் வீட்டு தனிமையில் இருப்பதோடு, கொரோனா அறிகுறிகள் இருப்பின் கூடுதலாக 14 நாட்கள் தனிமையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு RTPCR பரிசோதனையும் கட்டாயமில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
