திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிர்ச்சி.. முதல் முறையாக கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி.. தரிசனம் ரத்து?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனா பாதிக்கப்பட்டு அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனா பாதிக்கப்பட்டு அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பாதிப்பு சற்றும் குறையவில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. திருமலையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்த பின் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.
இதுவரை ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு (67) கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனா பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்திக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, பக்தர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் தரிசனத்தை ரத்து செய்யுமாறு ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு விரைவில் தடைவிதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.