ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 பேரின் விடுதலைக்கு எதிராக காங். மறுசீராய்வு மனு!!
ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே பேரறிவாளனை கடந்த மே.18 ஆம் தேதி சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில் மற்ற 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆறு பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க: நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு
அந்த மனுவில், 6 பேர் மேல்முறையீடு விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் கேட்கவில்லை. இந்த வழக்கில் இடையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கவில்லை. குறிப்பாக விடுவிக்கப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. இயற்கை நீதி கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் இவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது தவறானதாகும். பேரறிவாளன் உத்தரவை மட்டுமே கொண்டு 6 பேரையும் விடுதலை செய்தது தவறு. பொது ஒழுங்கு, அமைதி, நாட்டின் குற்ற நீதிமுறை ஆகியவற்றில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பான இந்த மனுவில் மத்திய அரசின் வாதத்தை கேட்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆதாருடன் பான் கார்டு இணைத்து விட்டீர்களா? காலக்கெடு முடிகிறது!!
வெளிநாட்டவர்கள் விடுதலை தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சாசனம் 7 ஆவது அட்டவணையின்படி வெளிநாட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. மேற்கண்ட வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயாமல் 6 பேரையும் விடுவித்த உத்தரவு மறுஆய்வு செய்ய தகுதியுடையது. எனவே நவம்பர் 11 ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மறு சீராய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.