PAN card holders alert: ஆதாருடன் பான் கார்டு இணைத்து விட்டீர்களா? காலக்கெடு முடிகிறது!!
பான் கார்டு வைத்திருந்து இன்னும் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு முக்கியமானது. பான் கார்டுதாரர் ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால், மார்ச் 2023க்குப் பின்னர் பான் கார்டு எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் செயலிழந்துவிடும் என்று இந்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.
பான் கார்டுதாரர்கள் மார்ச் 31, 2022க்குள், ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்து இருந்தது. இருப்பினும், கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. 2023, மார்ச் வரை பான் கார்டை ஆதாருடன் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டது.
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. முக்கியமான ஆவணங்களை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று முன்னர் தெரிவித்து இருந்தது.
ஜூலை 1, 2017-ன் படி பான் கார்டு வழங்கப்பட்டு, ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடையவர்கள், 31 மார்ச் 2022 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் ஆதார் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருந்தது.
அவ்வாறு செய்யத் தவறினால், அவரது பான் கார்டு செயலிழந்துவிடும் மற்றும் பான் கார்டு தேவைப்படும் இடங்களில் அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் செலுத்திய பின்னர், பான் எண்ணை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், 31 மார்ச் 2023 வரை, ஆதாருடன் இணைக்காவிட்டாலும், வருமான வரியை திரும்பப் பெறுதல், வருமானம் பெறுதல் போன்ற நடைமுறைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தலாம் என்று இந்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இணைக்கத் தவறினால் ஏப்ரல் 1, 2023 -ல் இருந்து பான் கார்டு செயலிழந்து விடும் என்று இந்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதாருடன் பான் கார்டு இணைப்பதற்கு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய குடியுரிமை இல்லாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், அசாம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அது தொடரும்.