காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏவை ஆராய்ந்து பார்த்தால் அது பிராமணர்களின் டி.என்.ஏ.வாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜவாலா பேசியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 50 ஆண்டுகளாகவே தன்னை ஒரு சிறுபான்மையினருக்கான கட்சியாகவே அடையாளப்படுத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களுக்கான கட்சி என்கிற ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்களை நேரில் அழைத்து சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். 

இப்படியாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கான கட்சி என்று விளம்பரம் ஆனதால் இந்துக்கள் பா.ஜ.க.வை நோக்கி சென்றுவிட்டதாக ராகுல் காந்தி நம்புகிறார். இதனால் இந்துக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள இந்து ஆலயங்களில் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். விரைவில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை கூட ராகுல் காந்தி செல்ல உள்ளார். இந்த நிலையில் ஹரியானாவில் குருசேத்ரா எனும் இடத்தில் பிரமானர்கள் மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளரும், ராகுல் காந்தியின் வலதுகரமுமாகவும் இருக்கும் ரந்தீப் சுர்ஜவாலா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சுர்ஜவாலா, காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது பிராமனர்களின் டி.என்.ஏ என்றார். அதனால் தான் பிரமாணர்கள் மாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதியாக தான் கலந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சிலர் பிரமாணர்கள் மாநாட்டு போஸ்டரில் எதற்கு ராகுல் காந்தியின் புகைப்படம் இருக்கிறது என்று சிலர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் சுர்ஜவாலா குறிப்பிட்டார்.

இதற்கு, காங்கிரஸ் கட்சியின் ரத்தத்தில் பிராமணர்களின் டி.என்.ஏ இருப்பதை தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், அதனால் தான் ராகுல் காந்தியின் புகைப்படம் பிராமணர்கள் மாநாட்டு பேனர்களில் இருப்பதாகவும் சுர்ஜவாலா தெரிவித்தார்.  அதாவது ராகுல் காந்தி ஒரு பிராமணர் என்பதை மறைமுகமாக சுர்ஜவாலா குறிப்பிட்டுள்ளதாகவும், இந்துக்களின் வாக்கு வங்கியை கவர பிராமணர், மற்றும் இந்து கடவுள்களின் பெயர்களை காங்கிரஸ் பயன்படுத்துவதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது.