இந்தியாவில் கொரோனா சமூக  தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு கூறிவந்த நிலையில், தற்போது  மருத்துவ நிபுணர்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுங்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் பாதிப்பு உயர்வதால் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதோ என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. ஆனால், மத்திய அரசு தரப்பில் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை யாரும் பயம்பட வேண்டாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய பொது சுகாதார சங்கம், சமூக மருத்துவ சங்கம், இந்திய தொற்று நோயியல் நிபுணர்கள் சங்கம் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் பொது முடக்கத்தை அறிவிப்பதற்கு முன்பாக அதற்கான மருத்துவ நிபுணர்களுடன் முறையாக கலந்தாலோசித்து இருக்க வேண்டும். அரசின் கொள்கை வகுப்பாளர்களும், அதிகாரிகள் மட்டத்தினரும் முடிவு எடுத்து அறிவித்து விட்டார்கள்.

மேலும், மருத்துவ துறை வல்லுநர்களை சரியாக கலந்தாலோசிக்காமல் நோயை கட்டுப்படுத்து வதற்கான திட்டங்களை வகுத்ததால் அது சரியாக அமையவில்லை. அதாவது தொற்று நோயியல் வல்லுநர்கள், தடுத்து மருத்துவ துறை நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களின் கருத்துக்களை கேட்டறிந்திருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டதால் இப்போது இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மனிதாபிமான நெருக்கடியும் உருவாகி இருக்கிறது.

மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும் சென்றடையவில்லை. பொது முடக்கத்திற்கு முன்பாக வெளிமாநில மக்கள் அவரவர் இடங்களுக்கு செல்ல அனுமதித்து இருந்தால் இந்த அளவிற்கு நோய் பரவுதல் ஏற்பட்டிருக்காது. மேலும், இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி  உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தகவல் தெரிவித்துள்ளனர்.