இந்திய ராணுவத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தான் கூறியது உண்மையில்லை என்று கர்னல் சோஃபியா குரேஷி மறுத்துள்ளார். S-400 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை தளங்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளையும், பல்வேறு இந்திய விமானப்படைத் தளங்கள் மற்றும் ராணுவ தளங்கள் சேதமடைந்ததாக பரப்பப்படும் வதந்திகளையும் அவர் மறுத்தார்.

பாகிஸ்தான் இந்திய ராணுவத்தின் உடைமைகளுக்குப் சேதங்களை ஏற்படுத்தியதாக சொல்வதில் எள்முனை அளவும் உண்மையில்லை என்று கர்னல் சோஃபியா குரேஷி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சனிக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாகிஸ்தானின் JF-17 ரக போர் விமானங்கள், இந்தியாவின் அதிநவீன S-400 வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை அமைவிடத்தைத் தாக்கியதாகக் கூறப்படும் செய்திகளை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

"பாகிஸ்தான் தனது JF-17 விமானத்தைக் கொண்டு எங்கள் S-400 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைத் தளத்தை சேதப்படுத்தியதாகப் பொய் சொல்கிறது," என்று கர்னல் குரேஷி அழுத்தமாக கூறினார். மேலும், சிர்சா, ஜம்மு, பதான்கோட், பட்டிண்டா, நலியா மற்றும் புஜ் ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமானப்படைத் தளங்களும், முக்கிய ராணுவ தளங்களும் சேதமடைந்ததாகப் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளையும் அவர் சுட்டிக்காட்டினார். "தவறான தகவலை திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்" என்று அவர் சாடினார்.

சண்டிகர் மற்றும் வியாஸ் ஆகிய இடங்களில் உள்ள வெடிமருந்து சேமிப்புக் கிடங்குகளுக்குச் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் செய்திகளையும் கர்னல் குரேஷி மறுத்தார். அந்தத் தகவல்களும் வெறும் கட்டுக்கதைகள் என்றார். அதோடு மட்டுமல்லாமல், இந்திய ராணுவம் மசூதிகளை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை அவர் கடுமையாகக் கண்டித்தார்.

"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், இந்திய ராணுவம் இந்திய அரசியலமைப்பின் உயரிய விழுமியங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் அறுதியிட்டுச் சொல்ல விரும்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.