பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவ கவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா குற்றமற்றவர் என சிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Suraj Revanna Case: கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா. 37 வயதான இவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி.யாக இருக்கிறார். இவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் 27 வயதான தொண்டர் சேத்தன் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

பாலியல் வன்கொடுமை புகார்

அதாவது கொரோனா ஊரடங்கின் போது ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுராவில் உள்ள கன்னிகாடா பண்ணை வீட்டில் சூரஜ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். தான் பாதிக்கப்பட்டது குறித்து சூரஜ் ரேவண்ணாவின் உதவியாளர் சிவகுமார் என்பவரிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் ''ரூ.2 கோடி பணம் தருகிறோம். அதை வாங்கி விட்டு அமைதியாக இருந்து விடு. இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம்'' என்று மிரட்டியதாகவும் சேத்தன் கூறியிருந்தார்.

கைது செய்து ஜாமீனில் விடுவிப்பு

இது தொடர்பாக சேத்தன் ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். இதேபோல் மற்றொரு கட்சி தொண்டரும் 4 ஆண்டுகளுக்கு முன் தனக்கும் சூரஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். சேத்தன் பொய் குற்றச்சாட்டுகளை கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக சூரஜ் ரேவண்ணா தரப்பில் இருந்தும் புகார் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

போதிய ஆதாரங்கள் இல்லை

இந்த இரண்டு வழக்குகளையும் கர்நாடக மாநில அரசு சிஐடி போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. குற்றச்சாட்டுகளின் உணர்திறன் தன்மை மற்றும் பெரிய அரசியல் கட்சி விவகாரம் என்பதால் சிஐடியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ''சூரஜ் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் குற்றமற்றவர்'' என்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சிஐடி போலீஸ் அறிக்கை தாக்கல்

''இந்த வழக்குகளில் சாட்சியங்கள், தடயவியல் சான்றுகள் சேகரிப்பு மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளின் பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை'' என்று சிஐடி போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பி ரிப்போர்ட்

"போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நாங்கள் முடிவு செய்து, 'பி ரிப்போர்ட்' தாக்கல் செய்துள்ளோம். இது வழக்கமாக ஒரு வழக்கில் முதன்மை ஆதாரங்கள் இல்லாதபோது சமர்ப்பிக்கப்படுகிறது" என்று சிஐடி துணை எஸ்பி மற்றும் விசாரணை அதிகாரி பி. உமேஷ் புதன்கிழமை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார். "அறிக்கையை ஏற்கலாமா வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம் இப்போது முடிவு செய்யும். இதேபோல் புகார் கொடுத்தவர்களும் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த அறிக்கை மீது ஆட்சேபனை தெரிவிக்கலாம்'' என்றார்.

பிரஜ்வல் ரேவண்ணாவும் பாலியல் குற்றவாளி

சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வல் ரேவண்ணாவும் பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை குற்றவாளி எனக்கூறி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.