கேரள அமைச்சருக்கு கத்தோலிக்க திருச்சபை கண்டனம்!
பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிரியார்கள் குறித்து கேரள அமைச்சர் கூறிய கருத்துக்கு அம்மாநில கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு எதிராக கேரள கலாச்சார விவகார அமைச்சர் சஜி செரியனின் கருத்துக்கு கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
சஜி செரியனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (கேசிபிசி) செய்தித் தொடர்பாளர் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி, உயர் பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு எதிராக அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய ஜேக்கப் பாலக்கப்பிள்ளி, சில இடதுசாரி தலைவர்களை சாடினார்.
கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் மணிப்பூர் வன்முறை குறித்து பாதிரியார்கள் மோடியுடன் விவாதிக்கவில்லை என்ற செரியனின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், கிறிஸ்தவர்களின் அரசியல் நிலைப்பாட்டை முடிவெடுப்பது அரசியல் கட்சிகளின் வேலை அல்ல என்று கூறினார். பிரதமர் மோட்யின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், கிறிஸ்தவ சமூகம் பங்கேற்றதை குறிப்பிட்ட அரசியல் நிகழ்வுகளுடன் இணைப்பதன் நோக்கம் குறித்தும் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு நாளை முதல் விசாரணை!
கிறிஸ்மஸ் நிகழ்ச்சியானது, நாட்டில் கிறிஸ்தவர்கள் வழங்கும் சேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் ஏற்பாடு செய்திருந்தது என சுட்டிக்காடிய அவர், இந்த விஷயத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுப்பதற்கு பதில், தேசத்திற்கான அவர்களின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக பிஷப்கள் உட்பட கிறிஸ்தவ பாதிரியார்கள் பங்கேற்பதை முன்னிலைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவ சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்தவ சமூகத்தினர், பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த கேரள கலாச்சார விவகார அமைச்சர் சஜி செரியன், மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் பேசுவதை விட, திராட்சை ஒயின் மற்றும் கேக்கை ருசிப்பதற்கே முன்னுரிமை அளிப்பதாக, பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயர்களை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.