திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு நாளை முதல் விசாரணை!
திமுக அமைச்சர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்க்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை முதல் விசாரிக்க உள்ளார்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நீதிபதிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மாற்றப்படுவர். அந்த வகையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றி வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றப்பட்டிருக்கிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வந்தார்.
முன்னதாக, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். குறிப்பாக, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்சஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால் வழக்குகள் தாமாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், அவர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பின் நகலை படித்து மூன்று நாட்களாக தூங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இடைப்பட்ட காலத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மேற்கண்ட வழக்குகளை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தார். அதன்படி, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான அவர் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளை நாளை முதல் விசாரிக்க உள்ளார்.
வழக்குகள் பின்னணி
தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2 சொத்து குவிப்புகள் வழக்கு போடப்பட்டன. 2006-2011 ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பொன்முடி மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.
அதேபோல், 2006- 2011 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
2006-2011 காலக்கட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி. 2008ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, 2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.
நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.. 2024-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்..
மேலும், 2001-2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2012ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ்சுக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2012ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
மேற்கண்ட இந்த முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்குகளை நாளை முதல் அவர் விசாரிக்கவுள்ளார்.