நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.. 2024-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்..
தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. மக்கள் 2024 ஆண்டை வான வேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றாக கூடிய பொதுமக்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு கேக் வெட்டியும், வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மெரினா, பெசண்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. சத்தமாக ஹேப்பி நி இயர் என்று வாழ்த்துகள் சொல்லியும், கேக் வெட்டியும் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், சில இடங்களில் பட்டாசுகள் வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். அடுக்குமாடி குடியிருப்பு, மற்ற குடியிருப்பு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனிடையே மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்களை தடுக்கவும் சென்னையில் சுமார் 18000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக எந்த வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள ரிசார்ட்டுகள், நட்சத்திர ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைகளில் மது விருந்து இனிப்புகளுடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள் நேற்றிரவு முதல் அதிகாலை வரை வழிபாட்டு தலங்களில் குவிந்தனர். இதனால் வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடற்கரை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடலுக்கு அருகே செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். கோயில்கள், தேவாலயங்கள் நள்ளிரவில் அதிகமானோர் கூடியதால் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது. மெரினா, அடையாறு, கிண்டி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாய்ல் நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலைகள் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
மேலும் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா என்று போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்ற பெயரில் எல்லை மீறுபவர்களை பிடிக்க போலீசார் சாதாரண உடையில் இருந்து கண்காணித்து வந்தனர்.
இதே போல் திருச்சி, மதுரை, கோவை என தமிழகத்தில் முக்கிய நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.