இவங்க தான்பா லக்கி பயணிகள்.. சந்திரயான் 3 லான்ச் - நடுவானில் கண்டு ரசித்த மக்கள் - வைரலாகும் வீடியோ!
காணக் கிடைக்காத அதிசய காட்சி ஒன்றை நேற்று சென்னையில் இருந்து டாக்கா நோக்கி பயணித்த விமான பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

நேற்று ஜூலை 14ம் தேதி, இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாக மாறி உள்ளது என்று தான் கூற வேண்டும். விண்வெளி துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை நேற்று சந்திரயான் 3 எழுதி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். நேற்று மதியம் சரியாக 2.35 நிமிடத்திற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.
திட்டமிட்டவாரே புறப்பட்ட 16வது நிமிடத்தில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் அது வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பல விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் இந்தியாவின் ஒரு கனவு திட்டம் தற்பொழுது மெய்யாகியுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை பிரதமர் மோடி அவர்களும், பல அரசியல் தலைவர்களும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3!
இந்நிலையில் காணக் கிடைக்காத அதிசய காட்சி ஒன்றை நேற்று சென்னையில் இருந்து டாக்கா நோக்கி பயணித்த விமான பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். சந்திரயான் 3 புறப்பட்ட சில நிமிடங்களில் விண்ணில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த பைலட் தனது பயணிகளிடம் ஒரு அதிசய செய்தியை கூறியுள்ளார்.
நாம் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் இதே நேரம் நமக்கு அருகில் தொலைவில் சந்திரயான் 3ம் விண்ணில் பறந்து கொண்டிருக்கிறது. அதை பார்த்து மகிழுங்கள் என்று அவர் கூறியுள்ளார். ஒரு பயணியும் அதை வீடியோ எடுத்து தற்பொழுது அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். விண்ணில் பறந்தவாரே சந்திரயான் 3 நிலவை நோக்கி சென்று கொண்டிருப்பதை கண்டு மக்கள் சந்தோஷம் அடைந்தனர்.
சந்திரயான் 3 செயற்கைகோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!