மணிப்பூரில் சட்டப்பிரிவு 355 அமல்; அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை
மணிப்பூரில் பாதுகாப்புப் பொறுப்பை மத்திய அரசு தன் கையில் எடுத்துள்ளது. இதற்காக அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355 -ஐ அமல்படுத்தியுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாதுகாப்புப் பொறுப்பை மத்திய அரசு தன் கையில் எடுத்துள்ளது. இதற்காக அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355 -ஐ அமல்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து கடந்த புதன்கிழமை கலவரம் நடந்தது. இதனையடுத்து இம்பால் மற்றும் பிற மாவட்டங்களில் 7,000 பேர் கொண்ட பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை முதல் மெல்ல அமைதி திருப்பத் தொடங்கியுள்ளது.
மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடக தேர்தல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, மணிப்பூருக்குச் சென்றிருக்கிறார். அங்கு மாநில நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தவருகிறார்.
பாதுகாப்புப் படையினர் சுராசந்த்பூரில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மெய்ட்டீஸ் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, இம்பாலில் லெட்மின்தாங் ஹாக்கிப் என்ற ஐஆர்எஸ் அதிகாரி என கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. "கடமையில் ஈடுபட்டிருக்கும் ஒரு அப்பாவி அரசு ஊழியர் கொல்லப்பட்டதை எந்த காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது" என இந்திய வருவாய்த்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் களவு போன ஆயுதங்கள்! திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறை எச்சரிக்கை
சட்டப்பிரிவு 355 என்ன சொல்கிறது?
இந்நிலையில், மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355 -ஐ அமல்படுத்தியுள்ளது. உள் தொந்தரவுகள் மற்றும் வெளிப்புற ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசுக்கு இந்த சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.
நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், விரைந்து செயல்பட்டு அதற்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த சட்டப்பிரிவு அமைந்துள்ளது. இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்துவதன் மூலம் பொதுவாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்ட ஒழுங்கு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்.
மாநிலத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், இயல்பு நிலையைக் கொண்டுவரவும் கூடுதல் காவல்துறை இயக்குநர் (உளவுத்துறை) அசுதோஷ் சின்ஹாவை மாநில அரசு நியமனம் செய்துள்ளது. பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சிஆர்பிஎஃப் தலைவர் குல்தீப் சிங்கும் நிலவரத்தைக் கண்காணித்து அறிக்கை அளிக்கவுள்ளார்.
மாநிலத் தலைநகர் இம்பாலில் வியாழனன்று மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே வெள்ளிக்கிழமை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் வேளையில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. மணிப்பூருக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து மாநிலங்களும் மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தங்கள் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஷில்லாங்கின் லாஜோங் கால்பந்து கிளப்பின் 60 மாணவர்கள் மற்றும் 25 உறுப்பினர்களை உள்ளடக்கிய தனது குடிமக்களை திரும்ப அழைத்து வர மேகாலயா அரசு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் அசாமில் தஞ்சம் புகுந்ததால், அவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறு மாநிலத்தின் கச்சார் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்குடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மணிப்பூரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை வரை அசாமின் கச்சார் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு இன மக்கள் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையை கடந்து லக்கிநகர் பஞ்சாயத்து பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.