ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் நடத்தலாம் என்பது பற்றி வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறாமலேயே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் முதல் அடுத்த கல்வியாண்டு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளதால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறிவிட்டன. ஆனால், பல தரப்பினரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிக நேரம் கம்ப்யூட்டர், மொபைலை பார்த்தால் மாணவர்களுக்கு பார்வை கோளாறு ஏற்படும் என்று எச்சரித்தனர்.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்று, ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறிகளை வகுக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. இதன்படி, “ப்ரீ கே.ஜி. மாணவர்களின் வயது காரணமாக, அவர்களுக்கு மொபைல் போன் மற்றும் லேப்டாப் வழியே பாடம் நடத்தக் கூடாது. அவர்களுக்கு தொலைக்காட்சி, ரேடியோ வழியாக பாடம் நடத்தலாம். இவர்களுக்கான வகுப்புகள் மகிழ்ச்சியும் விளையாட்டும் நிறைந்த செயல்முறையாக வகுப்பாக இருக்க வேண்டும்.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது.  1-8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஒரு நாளில் இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும். அந்த வகுப்புகள் தலா 45 என்ற அளவில் இருக்கலாம். 9-12 வகுப்புகளுக்கு ஒரு நாளில் நான்கு வகுப்புகள் மட்டும் நடத்தலாம். ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.