வங்கியில் ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்களுக்கு மட்டும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று முன்பு மத்திய அ ரசு கூறி இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 10-ந்தேதியில் இருந்து, இப்போது வரை ரூ.2 லட்சம் டெபாசிட் செய்திருந்தாலும், அல்லது பரிமாற்றம், பணம் எடுத்து இருந்தாலும் அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப தயாராகி உள்ளது.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியிடம் அனைத்து வங்கிக்கணக்குகளையும் கண்காணித்து, பட்டியல் தர வருமானவரித்துறை கோரியுள்ளது.
பிரதமர் மோடி அறிவிப்பு
நாட்டில் கருப்பு பணம் கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மத்தியஅரசு கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து, மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும், நவம்பர் 10-ந்தேதி முதல், டிசம்பர் 30-ந்தேதி வரை, வங்கியில் கணக்கு வைத்து இருப்போரின் பணப்பரிமாற்றம் ரூ. 2.50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஜன்தன் கணக்கு
கருப்பு பணத்தை வைத்திருக்கும் பணமுதலைகள் சிலர், ஏழைகளின் ஜன்தன் வங்கிக்கணக்கில் செலுத்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜன் தன் வங்கிக்கணக்குகளில் மட்டும் ரூபாய் நோட்டு அளிவிப்பு வெளியான 2 வாரங்களில் ரூ.27 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது. இதனால், பொதுமக்கள் அடுத்தவர்களின் பணத்தை தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய அனுமதிக்காதீர்கள் என வருமானவரித்துறை கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையே, டெல்லியில் கடந்த வாரம், ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் 44 போலி கணக்குகளில் ரூ.100 கோடி வரை பதுக்கியதாக 24 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இதுபோல் முறைகேட்டில் ஈடுபட்ட 27 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதிய முடிவு
இந்நிலையில், கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் 10ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கிக்கணக்குகளில் ரூ. 2. லட்சம் வரை டெபாசிட் செய்தவர்களுக்கும், செய்பவர்களுக்கும் , பரிமாற்றம் செய்பவர்கள், பணம் எடுத்தவர்கள் ஆகியோரின் கணக்கு விவரங்களை ரிசர்வ்வங்கியிடம் அரசு கேட்டுள்ளது. இவர்களுக்கு வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 50 நாள் காலகட்டத்துக்குள், ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்தவர்களும் கூட, வருமானவரித்துறையினர் வளையத்துக்கள் சிக்க உள்ளனர்.
ரூ. 2 லட்சம்
இது குறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " மத்திய அரசு ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியிட்ட பின், வங்கிக்கணக்குகளில் ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்பவர்களின் கணக்கை கண்காணிக்க முன் கூறியது. இப்போது, ரூ.2 லட்சம் பரிமாற்றம், டெபாசிட் செய்தவர்களின் பட்டியலையும் கேட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரூ. 2லட்சம் டெபாசிட் செய்தவர்கள், பரிமாற்றம் செய்தவர்களின் பட்டியலை அளிக்க கேட்டுள்ளோம். மத்தியஅரசு திடீரென ரூ.2 லட்சம் டெபாசிட், பரிமாற்றம்செய்தவர்களின் பட்டியலையும் கேட்டுள்ளதால் அவர்களுக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படலாம் "என தெரிவித்தார்.
