கொரோனா லாக்டவுன் காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு இ.எம்.ஐ. செலுத்துவதிலிருந்து மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ரிசர்வ் வங்கி விலக்கு அளித்தது. ஆனால், இ.எம்.ஐ. விலக்கு அளிக்கப்பட்ட காலத்தில் செலுத்தப்படாத தொகையில் வட்டித் தொகைக்கு வட்டி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வட்டிக்கு வட்டி செலுத்தும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. ஆனால், வட்டிக்கு வட்டி விதிக்காவிட்டால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தெரிவித்தன. ஆனால், வட்டிக்கு வட்டி வசூலிப்பதை பரிசீலிக்கும்படி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதுதொடர்பாக ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு மத்திய அரசிடம் பரிந்துரைகளை வழங்கியது.
 இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட இ.எம்.ஐ. தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு‌ பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.


பொதுமுடக்கக் காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாதத் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி விதிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. மேலும் வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு க‌டன், சிறு, குறு, தொழில் கடன் ஆகியவைகள் அடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 6 மாதங்களில் சரியாக தவணை செலுத்தியவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில், கூடுதல் பணம் செலுத்துவதிலிருந்து கடன்தாரர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.