பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் கார்கள் பீகாரில் உள்ள ஒரு சாதாரண கார் வாஷ் கடையில் கழுவப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடு என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்பில் (கான்வாய்) உள்ள உயர் ரக கார்கள், பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள ஒரு சாதாரண கார் கழுவும் கடையில் (Car Wash) சுத்தம் செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கார் கழுவும் கடையின் உரிமையாளரே இந்த வீடியோவைப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், பிரதமரின் பாதுகாப்புப் படைகள் (SPG) பயன்படுத்தும் வாகனங்களைப் போலவே இருக்கும், கருப்பு நிற ஹை-எண்ட் எஸ்.யு.வி. கார்கள் வரிசையாகக் கழுவப்படுவது தெளிவாகத் தெரிந்தது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இந்தக் கார்களில் ஒன்று, பிரதமர் பயணிக்கும் முக்கிய கார் என்றும் கூறி வருகின்றனர்.
பாதுகாப்புக் குறைபாடு?
பிரதமரின் கான்வாய் வாகனங்கள் இவ்வாறு உள்ளூர் கடையில் கழுவப்படுவது பாதுகாப்பு மீறல் என்று சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஒரு பயனர், "பிரதமரின் கார் ஒரு உள்ளூர் கார் கழுவும் கடையில் கழுவப்படுகிறது. கார் வாஷ் உரிமையாளரே இந்த வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கவனிக்கவும், இது பிரதமரின் கான்வாயில் உள்ள பல கார்களில் ஒன்று அல்ல, பிரதமர் பயணிக்கும் அதே கார்! பிரதமரின் கான்வாய்க்காக அரசின் அமைப்பிலேயே, SPG மேற்பார்வையில் பிரத்யேக கழுவும் மற்றும் சேவை செய்யும் பகுதி இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி இருக்க, இது எப்படி நடந்தது? இது ஒரு பெரும் பாதுகாப்புக் குறைபாடு!" என்று குறிப்பிட்டுள்ளார்.
உரிமையாளர் பக்கம் நீக்கம்:
சர்ச்சை தீவிரமானதையடுத்து, இந்த வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படும் 'விஸ்வகர்மா மோட்டார் விஜய்' என்ற கார் வாஷ் உரிமையாளரின் இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் பயணிக்கும் அல்லது அவரது பாதுகாப்புடன் தொடர்புடைய வாகனங்கள், பொது இடங்களில் இதுபோன்ற சேவைக்காக நிறுத்தப்பட்ட விவகாரம், நாட்டின் உயர் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இருப்பினும், இந்த வாகனங்கள் பிரதமரின் முக்கிய பாதுகாப்பு வாகனங்களா அல்லது கான்வாயின் ஒரு பகுதியா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
