புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் 9 பேருடன் கார் ஒன்று அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. கார் கடம்வாக் வஸ்தி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த இளைஞர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 9 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அசுர வேகத்தில் 
காரில் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.