நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது… நாளை பட்ஜெட் தாக்கல்….

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் நாடாளுமன்ற , பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாளை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும். அம்மாதம் இறுதிநாளில் அதாவது 28 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

ஆனால் இந்த ஆண்டு இது மாற்றி அமைக்கப்பட்டு, ஜனவரி., மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதுவும் இந்த ஆண்டு முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, அது மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்படவுள்ளது.

:இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்துகிறார்.

மேலும் பட்ஜெட்டுக்கு முதல்நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கையை அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

இன்று மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடும் இந்த கூட்டத்தொடர், மோடி அரசுக்கு வழக்கம்போல் சவால் மிகுந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படக் கூடாது என எதிர்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தியுள்ள நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதனிடையே ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.