Asianet News TamilAsianet News Tamil

நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…அனல் பறக்கும் என எதிர்பார்ப்பு..

budget session
Author
First Published Jan 30, 2017, 8:16 AM IST


நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…அனல் பறக்கும் என எதிர்பார்ப்பு..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கி 28-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


ஆனால் ஆங்கிலேயர் காலத்திய இந்த இந்த நடைமுறையை மாற்றி ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய முடிவு செய்து உள்ளது. அதுவும் இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, பொது பட்ஜெட்டுடன் இணைக் கப்பட்டுள்ளது..

பட்ஜெட் திட்டங்களை அடுத்த நிதியாண்டின் முதல் நாளிலேயே தொடங்குவதற்கு வசதியாக மத்திய அரசு முன்கூட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறதுஅதன்படி நாளை இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

budget session

நாளை நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.

.இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மோடி அரசுக்கு வழக்கம்போல் சவால் மிகுந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டை மத்திய அரசு முன்கூட்டியே தாக்கல் செய்வதன் மூலம் பல்வேறு மறைமுக சலுகைகளை இந்த மாநிலங்களுக்கு அறிவிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதை, தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தள்ளிவைக்கவேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, பட்ஜெட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சலுகைகள் எதையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

மேலும்  நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி விதிப்பை வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளலாம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகுந்த கூச்சல், குழப்பத்துடன் நடந்தது. இதனால் அப்போது பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் போனது. தற்போது, பிரதமர் அளித்த 50 நாள் கால அவகாசம் முடிந்துவிட்டதால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஏற்பட்ட விளைவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அக்கட்சியிடம் இருந்தும் மத்திய அரசு நெருக்கடியை சந்திக்கலாம்.

மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த வன்முறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஆகியவை பற்றியும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால் பட்ஜெட் கூட்டத்தொடரும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளதால், இவற்றை நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் அனுமதிக்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios