உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், திருமணத்தின் போது மாலை மாற்றும் சடங்கு முடிந்ததும் மணப்பெண் மாயமானார். பின்னர், அவர் தனது காதலனுடன் தப்பியோடி, அவருடன் வாழ விரும்புவதாகத் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமணத்தில் மாலை மாற்றிக்கொண்ட மணப்பெண், தாலி கட்டுவதற்கு முன் தனது காதலனுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உன்னாவ் மாவட்டத்தில் உள்ள புர்வா பகுதியில் உள்ள அஜய்பூர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தது. இது குறித்துப் போலீஸார் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
மாலை மாற்றியதும் மணமகள் மாயம்
திட்டமிட்டபடி மணமகனின் திருமண ஊர்வலம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. இரு குடும்பத்தினரும் வரவேற்பு உள்ளிட்ட வழக்கமான அனைத்துச் சடங்குகளையும் செய்தனர். மணமேடையில் மணமகனும் மணமகளும் மாலையிடும் சடங்கும் முடிந்தது.
அதன் பிறகு, அடுத்தகட்டமாக சடங்கிற்குத் தயாராகும் வேளையில், மணமகள் தனது அறைக்குச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு மணமகனின் குடும்பத்தினர், அடுத்த சடங்கிற்காக மணமகளை அழைக்கச் சென்றபோது, அவர் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
"என் காதலனுடன் வாழ விரும்புகிறேன்"
மணமகள் உள்ளூர் இளைஞர் ஒருவருடன் ஓடிவிட்டார் என்பதை இரு குடும்பத்தினரும் அறிந்த பிறகு, மணமகளின் தந்தை அந்த இளைஞரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது தொலைபேசியில் பேசிய மணமகள், தான் தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த மணமகனின் குடும்பத்தினர், மணமகள் இல்லாமல் தங்கள் வீட்டிற்குத் திரும்பினர்.
மணமகளின் தந்தை, புர்வா காவல் நிலையத்தில் தனது மகளைக் கூட்டிச் சென்ற இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


