“என்னை யார் நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்” என சில நாட்களுக்கு முன்பு நொந்துகொண்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா, தற்போது “நான் பிரதமரானதே ஒரு விபத்துதான்” என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அசாமையும் அருணாச்சலப்பிரதேசத்தையும் இணைக்கும் ஈரடுக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார். இந்தப் பாலத்துக்கு 1997-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் தேவகவுடதான் அடிக்கல் நாட்டினார். ஆனால், இந்தப் பாலத்தைத் திறந்தபோது, அது மோடியின் பிரம்மாண்ட சாதனை என சமூக வளைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதை வெளிப்படுத்தும்வகையில்தான், “இப்போது என்னை யார் நினைவில் வைத்திருக்கப்போகிறார்கள்” என்று தேவகவுடா நொந்துகொண்டார்.  

இந்தச் சூழ்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'தி ஆக்சிடென்ட்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற படம் பற்றி தேவகவுடாவிடன் கருத்து கேட்கப்பட்டது.  “இந்த சினிமாவுக்கு யார் அனுமதி அளித்தது; ஏன் அனுமதி அளிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இந்தப் படத்தை நான் பார்க்க வில்லை. நானே ஒரு விபத்தின் காரணமாக பிரதமரானவன்தான்” என்று கூறினார். 

2004-ல் சோனியா காந்தி பிரதமராகப் பதவியேற்க எதிர்ப்பு கிளம்பியதாலும் அந்தச் சூழ்நிலையில் பதவியை சோனியா விரும்பாத காரணத்தாலும் மன்மோகன் சிங்குக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதேபோல 1996-ல் விபிசிங், ஜோதிபாசு ஆகியோர் பிரதமராக மறுத்ததால், அன்று கர்நாடக முதல்வராக இருந்த தேவகவுடாவுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அதைக் கோடிட்டு காட்டித்தான் தற்போது தேவகவுடா பேசியிருக்கிறார்.