பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த ரூபாய் நோட்டு தடை உத்தரவு மூலம், நாட்டில் கருப்புபணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்துள்ளது.

மோடி அறிவிப்பு

நாட்டில் கருப்புபணம், ஊழல், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதன் மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த  ரூ.15.50 லட்சம் கோடி நள்ளிரவோடு ரத்து செய்யப்பட்டது. 

நிலைக்குழு கேள்வி

இந்நிலையில்,  ரூபாய் நோட்டு தடை குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைகக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 3 முறை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலை அழைத்து, விளக்கம் கேட்டது. ரூபாய் நோட்டு தடை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதா?, நன்கு ஆலோசிக்கப்பட்டதா?, எவ்வளவு ரூபாய் நோட்டுகள் வந்தன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ரிசர்வ் வங்ககவர்னரிடம் நாடாளுமன்ற குழு எழுப்பி இருந்தது.

ரிசர்வ்  வங்கி அறிக்கை

இந்நிலையில், கடந்த வாரம் அறிக்கை வௌியிட்ட ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டு தடையின் மூலம் 99.4 சதவீதம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிக்குள் வந்துவிட்டன, 1.6 சதவீதம் நோட்டுகள் மட்டுமே வரவில்லை எனத் தெரிவித்தது. இதன் மூலம் ரூ.15 ஆயிரத்து 280 கோடி மட்டுமே வங்கிக்குள் வரவில்லை எனத் தெரிவித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

மீண்டும் ரூபாய் நோட்டு தடையா?

ரூபாய் நோட்டு தடையின் மூலம் ரூ.15 ஆயிரத்து 280 கோடி நோட்டுகள் மட்டுமே திரும்பி வங்கிக்கு வரவில்லை. இது தொடர்பாக தீவிரமாக சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பிட்ட கால இடைவௌியில், மீண்டும் ரூபாய் நோட்டு தடை அமல்படுத்தப்படுமா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

பணிகள் தீவிரம்

தபால்நிலையங்கள், வங்கிகள் மூலம் பெறப்பட்ட, ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் துல்லியமான மதிப்பு, எண்ணிக்கை ஆகியவை குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிவடைய சிறிது காலம் எடுக்கும்.

அதேசமயம், கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக , முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் பெரும்பாலான ஊழியர்கள், 2 ஷிப்ட்களில், நவீன எந்திரங்கள் உதவியுடன் பணியாற்றி வருகின்றனர். ஜூன் 30-ந்தேதி வரை ரூ.15.28 லட்சம் கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வந்துள்ளன இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணம் ஒழிந்ததா?

அதேசமயம், ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு மூலம் கருப்புபணம் எவ்வளவுெவளிக்கொண்டு வரப்பட்டது, அல்லது ஒழிக்கப்பட்டது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. அதேசமயம், வங்கி, தபால்நிலையங்கள் மூலம் எத்தனை கோடி ரூபாய் சட்டப்பூர்வமாக பெறப்பட்டன என்பதற்கான தகவலும் இல்லை.

ரூபாய் நோட்டு தடை மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்களா?, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததா? என்பது குறித்தும் நேரடியான விளக்கம் இல்லை.