லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தாக குற்றம்சாட்டிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக அம்மா  அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10-ந் தேதி, டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஆய்வு செய்தபின்பு, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டினார்.

இதுதொடர்பாக கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு ஒன்றை நியமித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்நிலையில் திடீரென டிஐஜி ரூபா சிறைத் துறையிலிருந்து பெங்களூரு போக்குவரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இப்பிரச்சனை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மாற்றம் செய்ததற்கு சிறையிலேயே கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

கர்நாடக பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் இப்பிரச்சனையை கையிலெடுத்து போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் தொடங்கியதும், கர்நாடக மாநில பாஜக எம்.பி.க்கள் திடீரென ரூபா மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.