பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் கேக்குகளில் வண்ணம் மற்றும் சுவைக்காக உயிருக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயானங்கள் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது கேக் வெட்டுவதை விருப்பமான ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு என்று விதவிதமான கலர்களில், விதவிதமான சுவைகளில், விதவிதமான வடிவங்களில் கேக்குளை ஆர்டர் செய்து அதனை வெட்டி நாம் மகிழ்ச்சி அடைந்து வருகிறோம். இதில் அதிர்ச்சி அடைய வைக்கும் விஷயம் என்ன என்றால் இந்த கேக்குகளில் எல்லாம் சுவைக்காக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்பது தான்.  வழக்கமாக கேக்குகளில் இனிப்புக்காக சுக்ரோஸ் கலக்கப்படும். ஒரு அளவிற்கு சுக்ரோஸ் பயன்படுத்தப்படுவதால் உடலுக்கு பெரிய அளவில் தீங்குகள் ஏற்படுவதில்லை. ஆனால் தற்போது விற்பனைக்கு வரும் ரெட்வெல்வெட், பாஸ்ட்ரி, ஸ்பேஸ் கேக், க்ரீம் கேக் போன்றவற்றில் சுவையை கூட்ட சுக்ரோஸ் அதிகம் கலக்கப்படுவது தெரியவந்துள்ளது. சில வகை கேக்குகளில் செராடனின் மற்றும் கேனபின் போன்ற மருந்துகளும் கலக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த செராடனின் மற்றும் கேனபின் போதை மருந்து வகையை சார்ந்தவை. கேக்குடன் சேர்த்து செராடனின் மற்றும் கேனபினை சாப்பிடும் போது சுவை அதிகமாக தெரிவதுடன், மூளை நரம்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் கேனபின் கலந்த கேக்குகளை மீண்டும் மீண்டும் கேட்டு குழந்தைகள் அடம்பிடிக்கும் நிலை உருவாகும். இது மட்டும் இன்றி ரெட்45, யெல்லோ 3,, யெல்லோ 6, யெல்லோ 5 போன்ற வேதிப் பொருட்களும் கேக்குகளுக்கு வண்ணங்கள் கொடுக்க நிறமிகளாக பயன்படுத்தப்படுகின்றன.இந்த வேதிப் பொருட்கள் கேக்குடன் உடலுக்குள் சென்று நமது குடலில் ஒட்டிக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற கேக்குகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அது உடலுக்குள் சென்று விஷமாகி நமக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே கேக் சாப்பிடுபவர்கள் அதில் சேர்க்கப்படும் வேதி பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது.