பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ₹30,000 நிதியுதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் நெல், கோதுமைக்கு கூடுதல் ஆதரவு விலை வழங்கப்படும் என முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு ஒரே தவணையில் ₹30,000 நிதியுதவி மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மகளிருக்கு ரூ.30,000 உதவித்தொகை
தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மகளிரின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, மகர சங்கராந்தி (பொங்கல்) தினமான ஜனவரி 14ஆம் தேதி தோறும் பெண்களுக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
"அரசு அமைந்தவுடன், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, ஒரு வருடத்திற்கு ரூ.30,000 தொகை ஜனவரி 14, மகர சங்கராந்தி அன்று அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவோம்," என்று அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கொள்முதல் விலை உயர்வு
"விவசாயிகளுக்கு பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்குவோம். தற்போது மாநில அரசு ஒரு யூனிட்டிற்கு 55 பைசா வசூலிக்கிறது, ஆனால் அதை நாங்கள் பூஜ்ஜியமாகக் குறைப்போம்," என்றும் தேஜஸ்வி தெரிவித்தார்.
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (MSP) கூடுதலாக ஒரு குவிண்டாலுக்கு ₹300-ம், கோதுமைக்குக் கூடுதலாக ஒரு குவிண்டாலுக்கு ₹400-ம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து
சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், விவசாயக் கடன் சங்கங்களின் (PACS) தலைவர்கள் மற்றும் 'வியாபார் மண்டல்' (வணிகச் சங்கங்கள்) தலைவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் அறிவித்தார்.
மேலும், "மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 8,400 வியாபார் மண்டல்கள் மற்றும் PACS-களின் மேலாளர்களுக்கு அரசு சார்பில் மதிப்பூதியம் (Honorarium) வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
தேர்தல் விவரங்கள்
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படவுள்ளன.
