தமிழகத்தில் திமுக.வினர் பீகார் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின் தான் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வருகின்ற 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அண்மையில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் திமுக.வினர் பீகார் மாநில மக்களை துன்புறுத்துவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே பீகார் தேர்தலில் தமிழகத்தை மையமாக வைத்து பல கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ள கருத்து தேசிய அளவில் முக்கயத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
News 24 தொலைக்காட்சிக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேளிவியில், நாட்டின் சிறந்த முதல்வர் என யாரைக் குறிப்பிடுவீர்கள் என கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு பதில் அளித்த அவர், “என்னைப் பொறுத்தவரை ஸ்டாலின் தான் சிறந்த முதல்வர். அதற்கான காரணத்தையும் சொல்கிறேன். எங்களது பீகார் முதல்வர் வெளிநாடு சென்று முதலீட்டைக் கொண்டு வர முயற்சி செய்யவில்லை.
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மாநிலத்திற்காக வெளிநாட்டிற்கு சென்று முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார். முதலீடுகளைக் கொண்டு வருகிறார். எங்கள் பீகார் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கூட கலந்து கொள்வதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். தேஜஸ்வியின் கருத்தால் இந்திய அளவில் ஸ்டாலின் மீதான மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
