பீகாரிகள் மீது தாக்குதலுக்கு தூண்டிவிட்டது உண்மை.. முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி
பீகார் மக்கள் மீது திமுக நிர்வாகிகள் வன்முறையை தூண்டுவது போல் பேசியது உண்மை. ஆனால் பிரதமர் பேசியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை பேசியதாக மடைமாற்றம் செய்ய முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

பிரதமருக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை உச்சம் அடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் பரப்புரை வீடியோவைப் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
திமுக.வின் போலி வேடம் அம்பலப்பட்டுவிட்டது
இந்நிலையில் முதல்வரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.
தாத்தா காலம் தொடங்கி, தாத்தா காலம் வரை..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.
எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் அவர்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர்… https://t.co/upjtj80FTC
— K.Annamalai (@annamalai_k) October 31, 2025