பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி கட்சிகள் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றன. மாநிலத்தின், 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 10ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்ர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டுள்ளார். அதில், பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பீகாரில் மருத்துவம் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி வெளியிட்டிருந்த அறிக்கையில், விவசாயக்கடன் தள்ளுபடி, வேளாண் சட்டங்கள் நிராகரிப்பு, முதியவர் பெண்களுக்கு கவுரவ ஓய்வூதியம் போன்ற முக்கிய அம்சங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.