பெங்களூருவில் மனைவியை கொன்று தலையை துண்டித்து கணவன் ஸ்கூட்டரில் கொண்டு சென்றுள்ளார். இதைப்பார்த்து போலீசாரே அதிர்ந்து போயுள்ளனர்.

Bengaluru Man killed Wife Travels with severed head: பெங்களூருவில் மனைவியை கொன்று தலையைத் துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற கணவன் கைது செய்யப்பட்டார். பெங்களூரு புறநகர்ப் பகுதியான அனேக்கல் அருகே சந்தாபுரத்தில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. மனைவியை கொடூரமாக கொலை செய்த ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரே கைது செய்யப்பட்டார்.

மனைவி தலையை ஸ்கூட்டரில் கொண்டு சென்ற கணவன்

நேற்று இரவு 11.30 மணியளவில் பெங்களூருவில் அனேக்கலில் இருந்து சந்தாபுரம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரத்தக் கறையுடன் ஒருவர் ஸ்கூட்டரில் வேகமாகச் செல்வதைப் பார்த்தனர். அவரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தபோது, ஸ்கூட்டரில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவியை வெட்டிக் கொன்றார்

இது யார் என்று போலீசார் கேட்டதற்கு, அது தனது மனைவி என்றும் தானே கொலை செய்ததாகவும் கொலையாளி சங்கர் தெரிவித்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது நேற்று இரவு ஹீலாலிகே கிராமத்தில் இந்தக் கொலை நடந்தது. 26 வயதான மானசாவை அவரது கணவர் சங்கர் வீட்டில் இருந்த கோடாரியால் வெட்டிக்கொன்றார். பின்னர் அவரது தலையைத் துண்டித்து, காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு என்ன காரணம்?

இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. மானசாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சங்கர் சந்தேகித்ததாகவும், வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால், குழந்தையைப் பிரிய மனமில்லாமல் மானசா திரும்பி வந்ததாகவும், குழந்தையைத் தன்னுடன் அனுப்பும்படி கேட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

அதிர்ந்து போன பெங்களூரு

இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சங்கர் மனைவி மானசாவை கோடாரியால் வெட்டிக்கொன்றார். இந்த கொலைக்கான பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்று சங்கரிடம் விசாரித்து வருகின்றனர். கொலையாளி ஸ்கூட்டரில் மனைவியின் தலையை வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நகரமான பெங்களூரு கொலை நகரமாக மாறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.