அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு வெளியான பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ’அயோத்தி விவகாரத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை யாருடைய வெற்றி-தோல்வியாகவும் பார்க்க கூடாது. ராமபக்தி ஆனாலும், ரஹீம்பக்தி ஆனாலும், தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதே முதன்மையானது.

எப்படிப்பட்ட பிரச்சனையையும் சட்டத்தின் நடைமுறையின்படி தீர்த்துக்கொள்ள முடியும் என்பதாலும், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, நமது நீதித்துறையின் தொலைநோக்கு போன்றவற்றை மீண்டும் நிலைநாட்டியதாலும் சட்டத்தின்  முன்னர் அனைவரும் சமம் என்பதை தெளிவாக உணர்த்துவதாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக நீடித்த விவகாரத்தை நீதிக்கான அரங்கங்கள் சுமுகமான முறையில் தீர்த்து வைத்துள்ளன. அனைத்து தரப்புகளுக்கும் அனைத்து கண்ணோட்டங்களுக்கும் தங்களது வேறுபட்ட கருத்துகளை தெரிவிக்க போதுமான அவகாசமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது. நீதித்துறை நடைமுறைகளின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு மேலும் அதிகரிக்கும்.

இன்றைய தீர்ப்புக்கு பின்னர் இந்தியாவின் 130 கோடி மக்கள் கடைபிடித்துவரும் அமைதியும், சமாதானமும் இணைந்து வாழ்வதற்கான அவர்களது உறுதிப்பாட்டை அறிவிக்கின்றது. இத்தகைய உத்வேகமும், ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான ஆற்றலை அளிக்கட்டும்’’என அவர் பதிவிட்டுள்ளார்.