மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால், உண்டான பணிச்சுமை, அதைசமாளிக்க தேவையான வசதிகள் கேட்டு, மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. மேலும், முத்தரப்பு கூட்டத்தை கூட்டவும் கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஹர்விந்தர் சிங் , மத்திய நிதித்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-
நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வரவேற்கிறது.

மத்தியஅரசின் இலக்குகளை அடைய வங்கி நிர்வாகமும், ஊழியர்களும் உண்மையாக, ஆத்மார்த்தமாக உழைப்பார்கள். அதேசமயம், வங்கி ஊழியர்கள் சந்திக்கும் சில பிரச்சினைகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றவரும் மக்கள் நீண்ட வரிசையில் வங்கியின் வாசலில் காத்திருப்பதால், அவர்களுக்கு விரைவாக சேவையாற்ற, வங்கியின் ஒட்டுமொத்த நிர்வாகம், ஊழியர்களும் தொடர்ந்து உழைத்து வருகிறோம். நாளுக்கு நாள் மிகவும் அழுத்தமான சூழல் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
வரிசையில் நிற்கும்பொதுமக்கள் சில நேரங்களில் பொறுமை இழந்து, வங்கி ஊழியர்களை தாக்கும் சூழல் ஏற்படலாம், குறிப்பாக பெண் ஊழியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றால் பெரிய மன அழுத்தத்தை ஊழியர்களுக்கு தருகிறது.

அதுமட்டுமல்லாமல், நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு விரைவாக சேவையாற்றும் போது, அவர்களின் அடையாள அட்டையை ஆய்வு செய்வதில் வங்கி ஊழியர்கள் சிலர் பதற்றத்தில் தவறு செய்ய நேரிடலாம். . அதற்கு அவர்கள் எந்த ஊழியரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க முடியாது . மேலும், வங்கிப்பணி என்பது, பணம் தொடர்பான விஷயம். இது போன்ற நெருக்கடியான சூழலில் ஊழியர்கள் பணியாற்றும்போது, பணம் குறித்த தவறான பதிவேட்டுக்கும், அது வழிவக்கும்.
இன்னும் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால் உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும், தகுந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, இந்த அவசரமான சூழ்நிலையை சந்திக்க வேண்டும்.
ரூபாய் நோட்டு மாற்றும் பணியால், வங்கியின் வழக்கமான வர்த்தகச் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. ஆதலால், பணம் பட்டுவாடா செய்யும் இடம், மற்றும் மேலாண்மைக்கு கூடுதல் ஊழியர்களை நியமிப்பது அவசியம்.
இந்த பிரச்சினைகள் கருத்தில் கொண்டு, எப்படி திறம்பட சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க, அரசுஅதிகாரிகள், வங்கி நிர்வாகம், மற்றும் வங்கி அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு உடனடியாக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்கு ஏ.டி.எம். எந்திரங்கள் சரியாகும் வரை அனைத்து பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்க இந்த கூட்டம் நடத்தப்படுவது அவசியம். அரசுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தர வங்கிஅதிகாரிகளும், ஊழியர்களும் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள்
இவ்வாறு அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளது.
