கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் இருப்பு உள்ள பணத்தை, அனைத்து வங்கிகளிலும் செலுத்தி ரூ.4,500 வரை பெற்று கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், வங்கிகளின் வாசலில் பணத்தை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். இப்படி பணத்தை மாற்றினாலும், புதிய ரூ.2,000 நோட்டுகள், ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 மற்றும் 10, 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகின்றன.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள், தபால் நிலையங்களில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையை பொறுத்தவரை துறைமுகம், பாரிமுனை, சிந்தாதிரிப்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சூளை, எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், சேத்துப்பட்டு, பூக்கடை, சேப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் உள்ள வங்கிகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
பொதுமக்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், ஆதார் கார்டு, பான் கார்டு உள்பட அங்கீகரிக்கப்பட்ட சில அடையாள அட்டைகளை இணைத்து, தங்கள் வசம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.4,500 பெற்று செல்கின்றனர்.
பழைய ரூபாய்களை மாற்றுவதற்கு பொதுமக்கள் வங்கிகளின் முன்பு தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கின்றனர். வரிசையில் காத்து நிற்பவர்கள் குளிர்பானங்கள், வெயிலை சமாளிக்க குடை உள்ளிட்டவற்றுடன் வருகின்றனர். பெரும்பாலான வங்கிகளில் வழக்கம்போல ரூ.4,000 மட்டுமே மாற்றி கொடுக்கப்பட்டது. சில வங்கிகளில் அதையும் குறைத்து ரூ.2,000 மட்டுமே பொதுமக்களுக்கு தருகிறது.
மத்திய அரசின் உத்தரவை குறிப்பிட்டு கூறினாலும், வங்கி ஊழியர்கள் அறிவித்த பணம் தர மறுப்பதாக புகார்களும் எழுந்தன. இதனால் வங்கி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்படுவதை தொடர்ந்து காணமுடிகிறது.
எது எப்படியோ, செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் அலைவதும், அந்த பணத்தையே கையில் வைத்து கொண்டு விடுப்பு கூட எடுக்க முடியாமல் தவிக்கும் வங்கி ஊழியர்களும் பரிதாபத்துக்கு உரிய மனிதர்களே…..!
