அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. பிரம்மாண்ட அழைப்பிதழின் புகைப்படங்கள் இதோ..
ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலில் நடக்கும் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன
ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலில் நடக்கும் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ராமர் கோயிலின் கட்டிட அமைப்பு மற்றும் பகவான் ஸ்ரீராமரின் இளமைப்பருவ உருவம் ஆகியவை அந்த அழைப்பிதழ்களில் இடம்பெற்றுள்ளது. .மேலும் ராமர் கோயில் அழைப்பிதழில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் ஈடுபட்ட சில முக்கிய நபர்களின் சுருக்கமான சுயவிவரங்கள் அடங்கிய சிறு புத்தகமும் இடம்பெற்றுள்ளது..
பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோயில் கருவறையில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவுக்காக ராமர் கோயில் தயாராகி வருகிறது. இந்த திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ராமர் கோயில் அறக்கட்டளை - ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பாளர் பட்டியலில் 7,000 பேர் உள்ளனர், மேலும் அவர்களில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பெரும்பணக்கார தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோர் அடங்குவர். கும்பாபிஷேக அழைப்பிதழ்கள் விருந்தினர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அறக்கட்டளையின் உயர் அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது "அழைப்பு அட்டைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன" என்று கூறினார்.
ஒவ்வொரு அழைப்பிதழிலும் சிலை பிரதிஷ்டைக்கான நிகழ்ச்சி அட்டை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கத்தின் பயணம் மற்றும் அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு பெற்றவர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு சிறு புத்தகம் உள்ளது.
நாகர் பாணி கட்டடம்.. 5 மண்டபங்கள்.. அயோத்தி ராமர் கோயிலின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
அழைப்பிதழின் அட்டையில் ராமர் கோவிலின் படம் மற்றும் அதன் கீழே 'ஸ்ரீ ராம் தாம்' என்றும் அதற்கு கீழே 'அயோத்தி' என்றும் அச்சிடப்பட்டுள்ளது. அழைப்பிதழின் அட்டையில் "விசேஷ அழைப்பிதழ்" அல்லது "அபூர்வ அனாடிக் நிமந்திரன்" (இந்தி) என்றும் அச்சிடப்பட்டுள்ளது. "சிலை பிரதிஷ்டை" நிகழ்ச்சி அட்டையின் அட்டையில் கோவிலின் நிழற்படமும் உள்ளது மற்றும் அதற்குக் கீழே "விழா சிறப்பு" அல்லது "கார்யக்ரம் விசேஷ்" (இந்தியில்) என ஒரு தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலை பிரதிஷ்டைக்கான சுப முஹூர்த்தம் மதியம் 12:20 என்றும் கும்பாபிஷேக விழா நடைபெறும் தேதி - திங்கட்கிழமை, ஜனவரி 22, 2024 என்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ். ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று விழா அட்டையின் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ளது.
அழைப்பிதழின் உட்புறத்தில் உள்ள பிரதான அழைப்பிதழில் கோயில் பகவான் ராமர் இளமைப்பருவத்தில் இருந்த படங்கள் உள்ளன. அரச உடைகளை அணிந்து, தாமரையின் மீது நின்று, ஒரு கையில் வில் மற்றும் அம்பு ஏந்தியவாறு ஸ்ரீராமர் இருக்கும் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அழைப்பிதழின் அடுத்த பக்கத்தில், விழாவின் தேதி மற்றும் பிற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் கோவில் கட்டும் போராட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமர் கோவில் இயக்கத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் அடங்கிய சிறு புத்தகத்தில், தேவராஹா பாபா ஜி மகராஜ், மஹந்த் அபிராம் தாஸ், பரம்ஹன்ஸ் ராம்சந்திரதாஸ், பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் கே.கே.நாயர் உள்ளிட்ட ஆளுமைகளின் கலை ஓவியங்களும் உள்ளன.
இதனிடையே பிரபல தொலைக்காட்சி தொடரான "ராமாயணத்தில்" ராமர் மற்றும் சீதா தேவியாக நடித்த நடிகர்கள் அருண் கோவில் மற்றும் தீபிகா சிக்லியா ஆகியோரும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இருந்து 4,000 பார்ப்பனர்களுக்கு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. விருந்தினர் பட்டியலில் ஏராளமான சாதுக்கள் மற்றும் பார்ப்பனர்கள் மற்றும் சில வெளிநாட்டு அழைப்பாளர்களும் உள்ளனர்.
1992 முதல் 2024 வரை அயோத்தி ராமர் கோயிலுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு!
அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், "ராமர் கோவில் இயக்கத்தின் போது உயிரிழந்த 50 கரசேவகர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்..
பாரம்பரிய நாகர் பாணியில் கட்டப்பட்ட ராமர் கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும் என்று திரு ராய் முன்பு கூறியிருந்தார். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமும், மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.