500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, சந்தேகப்படும்படி வேலையில் ஈடுபட்ட 24 ஊழியர்களை, ஆக்ஸிஸ் வங்கி சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 50 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ராஜீவ் ஆனந்த், மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆக்ஸிஸ் வங்கியின் டெல்லியில் உள்ள 5 கிளைகள் உள்பட 8 கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நகை வியாபாரி ஒருவர், தனது கணக்கில் ரூ.600 கோடி செலுத்தினார். இது தொடர்பாக விசாரிப்பதற்காக, நொய்டாவில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளைக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சென்றனர்.
ஆனால், வங்கி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்ஸிஸ் வங்கியின் எந்த கிளையையும் மூடும்படி எந்த உத்தரவும் வரவில்லை.
இந்நிலையில், சந்தேகத்துக்குரிய வகையில் செயல்பட்டதாக, ஆக்ஸிஸ் வங்கியில் வேலை பார்க்கும் 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஆக்ஸிஸ் வங்கி கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
